கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றால் சுற்றுலா வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்வு

* வருவாய் இல்லாததால் வாகனங்கள் விற்பனை

* சுற்றுலா பகுதிகளை மேம்படுத்த கோரிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றால்,  சுற்றுலா வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா காலத்துக்கு முன்பு சுமார் 5 லட்சம் சுற்றுலா வாகனங்கள் இருந்தன. இவற்றில், எஸ்யூவி, செடான், டெம்போ, ஹாஸ்பேக் ஆகிய வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில், கொரோனா காரணமாக பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா தலங்களும், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதனால் வாடகை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் முடங்கின. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததுவுடன், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் புதிய மற்றும் பழைய கார்களை வாங்கினர். இபாஸ் காரணமாக, தனியார் வாகனத்தை தவிர்த்தனர். இதனாலும், வாடகை வாகனங்கள் ஓடவில்லை. இதற்கிடையில் டீசல் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் இயக்கப்படும் சுற்றுலா வாகனங்களின் வாடகை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.  

இதுகுறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: பெரும்பாலானோர் சுற்றுலா செல்ல விரும்பவில்லை. மேலும் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் இத்தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கோச், வேன், கார் என சுமார் 5 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் தற்ேபாது 2.50 லட்சமாக குறைந்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் வேறு வழியில்லாமல் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்.  இதன் காரணமாக கொரோனாவுக்கு முன்பு எஸ்யூவி வகை கார்களுக்கு வாடகையாக கி.மீ ₹14 வசூல் செய்யப்பட்டது. தற்போது இது ₹16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ஹாஸ்பேக், செடான், டெம்ேபா உள்ளிட்ட அனைத்து வகை கார்களின் வாடகையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: