வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 39 பேருக்கு 63 லட்சத்தில் வீடு கட்ட பணி ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அரசு துறை சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, செய்யூர்  எம்எல்ஏ பனையூர் பாபு, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் சுபலட்சுமி பாபு வரவேற்றார். சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் உள்ளிட்ட 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், “கடந்த டிசம்பர் மாதம் 15ம்தேதி லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 1769 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 1701 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  976 பயனாளிகளுக்கு ரூ.16.32 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  பெறப்பட்ட மனுக்களில 960 மனுக்கள் வருவாய்த்துறை தொடர்புடையதாகும். 527 மனுக்கள் ஊரக வளர்ச்சித்துறை சம்பந்தப்பட்ட மனுக்கள். 282 மனுக்கள் பிற துறைகளை சார்ந்தவை. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்படுகிறது. இதில் 323 குடும்பங்களுக்கு ரூ.2.54 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

20 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 64  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், 69 ஆதரவற்ற நபர்களுக்கு உதவித்தொகையும், 24 நபர்களுக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5.35 லட்சம் மதிப்பிலான நிதி உதவியும், இருளர் மக்களுக்கு இனச்சான்றிதழ், மின்னணு குடும்ப அட்டைகள், கால்நடை துறை சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 39 பயனாளிகளுக்கு 63 லட்சம் மதிப்பில் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு மணிவண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, மாவட்ட துணை செயலாளர் தசரதன், பொதுக்குழு உறுப்பினர் புதுப்பட்டு மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி தணிகாசலம், வடபட்டினம் ஊராட்சி தலைவர் வேலாயுதம்,  மாவட்ட பிரதிநிதி பாபு ஆசிரியர், ஒன்றிய துணை செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன், மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: