சாலை, தரைப்பால பணி தீவிரம்

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே தரைப்பாலம் கட்டுவதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு தார் சாலையை வெட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளாவதாக தினகரனில் செய்தி வெளியானதன் எதிரொலியாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டியிலிருந்து சின்னதிருப்பதி வரை செல்லும் தார் சாலையை விரிவுபடுத்தும் பணி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது. அப்போது, மழைநீர் செல்லும் வகையில் தரைப்பாலம் அமைப்பதாக கூறி கஞ்சநாயக்கன்பட்டி குயவர் தெரு பகுதியில் தார் சாலையை துண்டித்தனர். மேலும், சாலையின் குறுக்கே சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளத்தில் தவறி விழுந்து சிலர் காயமடைந்ததால், முற்றிலும் பாதையை தடை செய்யும் வகையில் ஒப்பந்ததாரர்கள் குழி தோண்டி போட்டனர்.

ஆனால், ஒருமாத காலமாகியும் எந்த பணியும் தொடங்காமல், அப்படியே விட்டுள்ளதால் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் அந்த வழியே செல்ல வழியில்லாமல் சைக்கிள்களை ஆபத்தான குழியின் ஓரத்தில் தள்ளி சென்று வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணி, தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: