போரூர் ஏரி ரூ100 கோடியில் சீரமைப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியை ரூ100 கோடி செலவில் சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியை ₹100 கோடி செலவில் சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள உபரிநீர் வெளியேறும் கால்வாய் மீட்டெடுக்கப்படும். இந்த கால்வாய் புதிதாக தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடியிருப்புகள் வழியாக சென்றது. இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் மழை பெய்த போது கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, தற்போது கொளுத்துவாஞ்சேரியில் உள்ள தந்திகால்வாய் - ராமாபுரம் நல்லா ஏரிக்கு இடையே உபரிநீர் வெளியேறும் வகையில் மறுசீரமைக்கப்படும்.

ராமாபுரம் நல்லா ஏரி அங்கிருந்து அடையாற்றில் பாய்கிறது. ஆறு மாதங்களில் சீரமைப்பு திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் இப்பணியை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிந்ததும், தனலட்சுமி நகர், குமார நகர், ஸ்ரீ சாய் நகர், மதுரம் நகர், ஜோதி நகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு இருக்காது, என்றனர்.

Related Stories: