அரசின் நலத்திட்டங்களை ஊழல் செல்லரிக்க செய்கிறது; மாமூல் வாங்கும் போலீசார் மீது குற்ற நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்தவரிடம் வாரந்தோறும் 100 ரூபாய் மாமூல் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாசுக்கு மூன்றாண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைத்து காவல்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குமாரதாஸ் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது அல்ல என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

 

மேலும், உத்தரவில், இந்த தண்டனையிலிருந்து மாமூல் பெறுவதை காவல் துறை உயரதிகாரிகள் தீவிரமாக கருதவில்லை என்பது தெளிவாகிறது. மாமூல் வாங்குவதும் குற்றம் என்றாலும், அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.  இந்த சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்க செய்கிறது என்பது வேதனையளிக்கிறது. ஊழலை கையாள அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை நேர்மையான அதிகாரிகளை நியமித்து வலுப்படுத்த வேண்டும்.  மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும்.

காவல்துறையினர் மாமூல் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக் கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். மாமூல் வாங்குவதை கட்டுப்படுத்த உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறும் துறை ரீதியான நடவடிக்கையை மட்டும் எடுக்காமல், வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: