ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்படும் அபாயம் எதிரொலி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் டெல்லி பறந்தார்

சென்னை: அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்க எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். . அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ரவீந்திரநாத் எம்பி, ஜெ.சி.டி.பிரபாகரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

 டெல்லியில் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை ஓரங்கட்டவும்  பொதுச்செயலாளராக வரவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். நீங்கள் (மோடி) கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் இரட்டை தலைமையே தொடர்ந்து நீடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார்.

 அதேபோன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில், தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் தீர்மானங்கள் நிறைவேற்றினால் கட்சி சின்னம், கொடியை முடக்க வேண்டும் என்று மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜ சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கு முன்மொழிந்துள்ள திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி அணியும் டெல்லி விரைகிறது

இந்நிலையில், எடப்பாடி அணியை சேர்ந்த எம்பி தம்பிதுரையும் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவர், பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் முர்மு மனுதாக்கல் செய்யும்போது உடன் இருப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி அணியை சேர்ந்த மேலும் பலர் இன்று காலையில் டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் அவர்கள் பாஜ தலைவர்களை சந்திப்பதோடு, தேர்தல் ஆணையத்தில் தனியாக புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: