பொதுக்குழு உறுப்பினர்கள் 99% பேர் கோரிக்கையின்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி ஜூலை 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்: முன்னாள் அமைச்சர்கள் கருத்து

சென்னை: பொதுக்குழு உறுப்பினர்கள் 99 சதவீதம் பேரின் கோரிக்கையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:கே.பி.முனுசாமி: ஒன்றரை கோடி தொண்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் 2,700 பேரில் 2,600 பேர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படி கொடுக்கப்பட்ட மனுவின் மீது தான் வருகிற 11ம் தேதி நடைபெற இருக்கிற பொதுக்குழுவில் ஒரு தீர்மானமாக கொண்டு வர இருக்கிறோம். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது. வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் உறுதியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக உருவாகுவார். அதிமுக தொண்டர்களால் அவர் உருவாக்கப்படுவார்.

கோகுல இந்திரா: ஓபிஎஸ் கோர்ட்டுக்கு போய் விட்டார். இன்று வந்தவர்கள் எல்லாருமே, அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்த பிறகு, இரவோடு இரவாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அப்படி வந்திருக்கும்போது, தொண்டர்களின் உணர்வுதான் ரொம்ப முக்கியம். அதனால், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பது யாருடைய எண்ணமும் இல்லை, மனதிலும் இல்லை.ஆர்.பி.உதயகுமார்: பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை அறிவித்து இருக்கிறார். 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் உற்சாகமாக, மனமகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர். அடுத்த பொதுக்குழுவில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயக்குமார்: ஒற்றைத் தலைமை குறித்து இன்றைக்கே தீர்மானம் கொண்டு வந்து, அதை விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்பது அனைத்து நிர்வாகிகளின் எண்ணம். அந்த எண்ணத்தின் அடிப்படையில் வருகிற 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அந்த ஒற்றைத் தலைமை தீர்மானம் கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: