திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் பெயர்த்தி தீப்தி- விஷ்வக்சேனா ஆகியோரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர்-மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில்-திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்னைக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டுத்திருமணம். அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள் தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.

 கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவர் இருக்கிற இடத்தில் எப்போதும் விசுவாசமாக - நன்றி உணர்வோடு இருந்து பணியாற்றுபவர் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் எம்.ஜி.ஆருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அதைத்தொடர்ந்து நம்முடைய கலைஞர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இன்றைக்கு என்னுடைய தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு - கடமையாற்றி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.  தென்பகுதியில் எல்லோரும் சொல்வார்கள், பெரிய மருது-சின்ன மருது என்று, அது போல பெரிய மருது சின்ன மருதுவாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.- தங்கம் தென்னரசும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை பொறுத்தவரைக்கும் இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஏதாவது பணி ஒன்றை அவரிடத்தில் சொன்னால், எதையும் முடியாது என்று சொல்லமாட்டார். ‘அதுதானே.. பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்வார். அண்ணாச்சி... அண்ணாச்சி... என்று எல்லோரையும் அண்ணாச்சி என்று சொல்லி, அவரையும் அண்ணாச்சி என்று சொல்லுமளவிற்கு அந்த ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருப்பவர். தீப்தி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கு மட்டும் பேத்தி அல்ல. எனக்கும் பேத்திதான். காரணம் சிறுவயதில் இருந்தே நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பவன்.

அதேபோல் என்னுடைய தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டபோது, லண்டனுக்கு அழைத்துச் சென்றபோது, அப்போது அருகில் இருந்த எல்லா சிகிச்சைகளுக்கும் துணைநின்று பணியாற்றியவர் டாக்டர் அருண்குமார். நான் அதை நிச்சயம் என்றைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக என்னுடைய குடும்பத்தின் சார்பில் நான் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் நான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்தத் திருமணத்திற்கு எப்படியும் வரவேண்டும் என்ற அந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: