மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் 100வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் 100வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்மாள் தாஸ் பி.பி.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் (கி.பி. 1639 தொடங்கி 1948 வரை) பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாறு நீண்டு நெடியது.

மன்னராக இருந்தபோதிலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததோடு, நம் இந்திய திருநாடு விடுதலைப் பெற்றவுடன் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் வேண்டுகோளை ஏற்று தனது புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்து, கஜானாவிலிருந்த 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்ட அத்தனையையும் ஒப்படைத்த பெருமைக்குரியவர். மேலும், புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தையும் அரசிடம் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவரது உருவச் சிலையை 14.3.2000 அன்று கலைஞர் திறந்து வைத்ததை பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன். இந்நன்னாளில் மன்னரின் எளிமையும் அவர் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளும் நாம் அனைவரும் நினைவு கூரத்தக்கது. அப்பெருமகனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: