வடுவூர் அருகே உளுந்து விதைப்பண்ணையில் வயலாய்வு

மன்னார்குடி : வடுவூர் அடுத்த கருவாக்குறிச்சி, தளிக்கோட்டை மற்றும் நல்லிக்கோட்டை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணைகளை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் ஜெய பிரகாஷ், நீடாமங்கலம் விதைச்சான்று அலுவலர் பிரபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சித்திரை பட்டத்தில் 798 ஹெக்டேர் பரப்பில் உளுந்து விதைப்பண்ணை அமைத்து விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த விதைச்சான்று அலுவலர்கள் பூக்கும் தருணத்திலும், காய்முதிர்ச்சி அடைந்துள்ள தருணத்திலும் இரண்டுமுறை வயலாய்வு மேற்கொண்டு கலவன்கள் நீக்கப்பட்டு வயல்தரம் பேணப்பட்ட விதைப்பண்ணையை ஆய்வு செய்து விதைக்கொள்முதல் செய்திட பரிந்துரை செய்வார்கள்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் ஜெயபிரகாஷ் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டாரங்களில் கருவாக்குறிச்சி, தளிக்கோட்டை மற்றும் நல்லிக்கோட்டை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணைகளை நேற்று ஆய்வுமேற்கொண்டு இரண்டு சத டிஏபி கரைசலை இலை வழியாக பூக்கும் தருவாயில் தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு நன்கு திரட்சியான காய்கள் உருவாகி கூடுதல் மகசூல் பெற இயலும் என தெரிவித்தார்.

நீடாமங்கலம் விதைச்சான்று அலுவலர் பிரபு உடன் இணைந்து வயலாய்வு மேற்கொண்டு பிற ரக கலவன்கள் முறையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதா, வயல் தரம் பேணப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து விதைப்பண்ணைகளை முறையாக அறுவடை செய்து காயவைத்து தூய்மையான கொள்கலன்களில் கொள்முதல் செய்து சுத்தியறிக்கை பெற்று உரிய நேரத்தில் விதை சுத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கினார்.ஆய்வின்போது உதவி விதை அலுவலர்கள் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன் மற்றும் அழகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: