கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர், மேயர் ஆய்வு

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர், மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். சென்னையில் சென்ற வருடம் ஏற்பட்ட மழை வௌ்ள பாதிப்புகள் மீண்டும் தொடராமல் இருக்க சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தி தற்போது சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவஹர் நகர் 70 அடி ரோடு, ஜி.கே.எம்.காலனி, வண்ணாங்குட்டை பகுதி, எஸ்.ஆர்.பி.காலனி, 7வது தெரு, எஸ்.ஆர்.பி.கோயில் வடக்கு தெரு, மதுரை சாமி மடம், ஜி.கே.எம் காலனி 24வது தெருவில் உள்ள குட்டை ஹரிதாஸ் குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர், மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் திருவிக நகர் மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில் தற்போது முடிந்துள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வு பணியின்போது திருவிக நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிவர்மன், பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: