பரிசு உள்ளதாக செல்போனில் லிங்க் அனுப்பி வேலூர் கலெக்டர் பெயரில் டிஆர்ஓவிடம் மோசடி முயற்சி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர்: பரிசு உள்ளதாக வேலூர் கலெக்டர் பெயரில், டிஆர்ஓ செல்போனுக்கு லிங்க் அனுப்பிய மர்மநபர், மோசடி செய்ய முயன்றது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் டிஆர்ஓ ராமமூர்த்தியின் வாட்ஸ் அப்பில் நேற்று காலை ஒரு மெசேஜ் வந்தது. அதில் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் புகைப்படம் வைக்கப்பட்ட டிபி இருந்தது. அதில் நான் முக்கியமான கூட்டத்தில் உள்ளதால் முக்கியமான போன் கால்களை மட்டும் எடுக்க முடியும். எனவே என்னிடம் 10 கூப்பன் கிப்ட் கார்டுகள் உள்ளது. நான் அதை 10 நபர்களுக்கு 1 மணி நேரத்தில் அனுப்பி பயன்படுத்த வேண்டும். அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இந்த லிங்கை திறந்து பார்த்து பரிசு அல்லது பணம் பெற்றுக்கொள்ளவும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த டிஆர்ஓ, உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த எண்ணிற்கு போன் செய்து விசாரித்தார். அப்போது அதில் பேசிய நபர், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து பேசுவதாக கூறினார். எனக்கும், அதற்கும் எந்த தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து சிறிதுநேரத்தில் டிஆர்ஓவின் எண்ணுக்கு மற்றொரு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து கலெக்டரின் புகைப்படம் வைக்கப்பட்ட டிபியுடன் அதேபோன்று லிங்க் வந்துள்ளது. அதில், ‘‘முதலில் அனுப்பிய செல்போனை பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த எண்ணில் அனுப்பிய லிங்க்கை பார்த்து பரிசை பெற்றுக்கொள்ளவும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியனை தொடர்புகொண்டு டிஆர்ஓ தெரிவித்தார்.

கலெக்டர் உத்தரவின்பேரில் அவரது நேர்முக உதவியாளர்(பொது) விஜயராகவன் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து டிஆர்ஓவுக்கு 2 எண்களில் இருந்து வந்த மெசேஜ் மற்றும் அந்த எண் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கோவை கலெக்டர் பெயரிலும் மோசடி: கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐடி வைத்து பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக கலெக்டர், தனது டிவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது போட்டோவை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.  பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐடி. யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: