தமிழகத்தில் அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் செயல்பட தோட்டக்கலை துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு

சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை சேப்பாக்கம், தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1999-2000ம் ஆண்டு தமிழ்நாட்டில் உழவர் சந்தை என்கிற கனவு திட்டம் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சராசரி வரவு 1866 மெ.டன். ரூ.5.99 கோடிக்கு விற்பனை நடக்கிறது. 7,219 விவசாயிகளும், 2.96 லட்சம் நுகர்வோர்களும் பயனடைகிறார்கள்.தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் செயல்பட தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து உழவர் சந்தைகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: