தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கப்பலில் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட கப்பலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, இலங்கைக்கு அனுப்புவதற்காக 30 ஆயிரம் டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. இதனை பொட்டலமிடும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு முதல் கப்பல் இன்று (22ம்தேதி) தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் இன்று புறப்பட்டு சென்றது. கப்பலை தமிழக உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த பணிகளை  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: