தமிழகத்தில் இதுவரை 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 208 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில், திருக்கோயில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன. திருக்கோயில்களில் மற்றும் கட்டடங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் அடங்குவனவாகும். வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 07.05.2021 முதல் 17.06.2022 வரை 208 திருக்கோயில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.  ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை உள்ள  காலத்தில் மேலும் 30 திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: