திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாக்களை வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் முகாம், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் நடைபெற்றது. இதன் ஒருகட்டமாக, நேற்று காலை பம்மல் பகுதியில் உள்ள 1வது மண்டல அலுவலகத்திலும், மதியம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள 2வது மண்டல அலுவலகத்திலும் மனு பெறப்பட்டது.இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது,  மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் 600க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். பெரும்பாலான கோரிக்கைகள் மின்தடை குறித்து வருவதால், மின்தடை ஏற்படாமல் தீர்வு காண மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்காடை திட்டம், மின்வயர் புதைப்பது போன்ற பணிகளால் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

தொடர்ந்து புகார்கள் வருவதால் இவற்றை உடனடியாக சீரமைக்கவும், திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் வருவாய்த்துறையினர் பதிவேடு அடங்கலில் அவற்றை பதிவு செய்யாமல் வைத்துள்ளனர். எனவே, அவற்றை பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை காலத்திற்கு முன்பு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, அனைத்து நீர்வழி கால்வாய்களும், நீர்நிலைகளும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.முகாமில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பல்லாவரம் எம்எல்ஏ  இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ்,  மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: