கோடைகாலத்திலும் முழு கொள்ளளவை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: கோடைக்காலத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளது. எனவே, ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ெசல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வருகிறது செம்பரம்பாக்கம் ஏரி. இது சுமார் 6,300 ஏக்கர்  பரப்பளவு கொண்டது. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இந்நிலையில் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி நீர்வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23.36 அடியை எட்டி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.  ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதை அடுத்து பாதுகாப்பு கருதி நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 250 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கரையோர பகுதி மக்களின் செல்போன்களுக்கு தமிழக அரசால் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிப்பவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு கருதி வெளியேற்றி வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையும் பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related Stories: