மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கும் ஸ்ரீபெரும்புதூர் செல்லபெருமாள் நகர்

* இரவில் செல்ல பொதுமக்கள் அச்சம்

* குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் செல்லபெருமாள் நகர் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், இரவில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலைஉள்ளது. மேலும், எப்போது, இருள் சூழ்ந்து கிடப்பதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 2வது வார்டு செல்லபெருமாள் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பு உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பெரும்புதூர் செல்லபெருமாள் நகரில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

தற்போது, இந்த நகரில் தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் பொறுத்தபட்டுள்ள மின்விளக்கு ஒன்று கூட எரிவதில்லை. இதனால், இரவில் தெருவில் நடந்தும் மற்றும் பைக்கில் செல்லும் பொதுமக்களை மர்ம நபர்கள் வழிமறித்து செயின், செல்போன் மற்றும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சாலை, மழைநீர் கால்வாய், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபெருமாள் நகரில் உள்ள மின் விளக்கு பழுதாகி கிடக்கின்றன. இதனால், நகர் முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சில சமூக விரோதிகள், இரவில் நடந்து செல்லும் மக்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பெரும்புதூர் பேரூராட்சி செல்லபெருமாள் நகரில் சாலைகளை சீரமைத்து, மின் விளக்கு பொறுத்தி, கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: