ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதியில் அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திகடன்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.எல்லாபுரம் ஒன்றியம் ஆரக்கம்பட்டு ஊராட்சியில் லட்சுமி அம்மன் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 20 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மகா கணபதி மற்றும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பெருமாள் உற்சவம் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி லட்சுமி அம்மனுக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 250 பக்தர்கள் 10 நாட்கள் காப்புகட்டி விரதமிருந்து நேற்று முன்தினம் மாலை கொசஸ்தலை ஆற்றில் புனித நீராடி அங்கு காத்திருந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து முடித்த பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட லட்சுமி அம்மன் டிராக்டர் மூலம் வைத்து புனித நீராடும் இடத்திலிருந்து பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஆலயம் வந்த பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பின்னர் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர். பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் கிராமத்தில் புராதன திரவுபதி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, அக்னி குண்டம் திருவிழா கடந்த 18 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த, விழாவை யொட்டி தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடந்தது.

தீமிதி திருவிழாவையொட்டி பாலாபுரம், மகன் காளிகாபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் கோயில் அருகே அக்னி குண்டம் எதிரில் வந்தடைந்தனர். அப்போது, தீ குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான கிராம மக்கள் மத்தியில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், தீ மிதிக்க தொடங்கியபோது கனமழை பெய்தது. இருப்பினும், பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் கொட்டும் மழையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்‌. தீமிதி விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: