விசாரணையில் கைதி இறந்த விவகாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை:  கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி உயிரிழந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை  செய்தனர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் கடந்த 12 ம் தேதி மாலை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர்  உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு காவல்துறை காரணம் என ராஜசேகரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இது சம்பந்தமாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாஜிஸ்திரேட் லட்சுமி இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டார். அவரது மேற்பார்வையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. இந்த உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில்  உடற்கூறு ஆய்வு முதல் தகவல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் ராஜசேகர் உடலிலுள்ள காயங்களால் அவர் உயிரிழக்கவில்லை எனவும் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழக்கவில்லை எனவும் பிரேதப் பரிசோதனை முதல் தகவல் அறிக்கை வெளியானது. இந்நிலையில் ராஜசேகர் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோ ராஜசேகரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி ராஜசேகரின் உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பெற்றுக் கொண்டு  சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செயதனர்.

இந்த விவகாரத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில்  கொடுங்கையூர் பகுதிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை துவக்கினர்.அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 31 பேர் எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சிபிசிஐடி டிஎஸ்பி சசிதர் முன்பு தங்களது விளக்கத்தை அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் மற்றும் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உட்பட 5 பேரிடமும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரியும் 10 போலீசார் மற்றும்  பொதுமக்கள் 4 பேர் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: