பித்தளை நகைகளை அடகு வைத்து தேசிய வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி: உதவி மேலாளர் உள்பட 2 பேர் கைது

கோவை: கோவை வங்கியில் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகு வைத்து ரூ.1.30 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை சேரன்மாநகரில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இதில் மேலாளராக பணியாற்றியவர் பிரேம்குமார். உதவி மேலாளராக உஷா என்பவர் பணியாற்றினார். கடந்த ஆண்டு இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகு வைத்து மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்த மோசடியில் வங்கி மேலாளர் பிரேம்குமார், உதவி மேலாளர் உஷா, நகை மதிப்பீட்டாளர் உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளர் சுப்ரமணியன், கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் 3 கிலோ போலி நகைகளை அடகு வைத்து, மோசடியாக ரூ.1.30 கோடி பெறப்பட்டது தெரியவந்தது.

போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதில் ரெஜி என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று இரவு வங்கி முன்னாள் மேலாளர் பிரேம்குமார், உதவி மேலாளர் உஷா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: