தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! ... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிவுரை!!

சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது! என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலப் பாதையை நன்று சிந்தித்து, நிதானித்து தேர்வு செய்திட வேண்டும்.ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம். இதனைச் அன்புச் செல்வங்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான கல்வியை தேர்வு செய்திட வேண்டும். இத்தேர்வுகளில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்கள் மனச்சோர்வடையாமல் மீண்டும் முயற்சி செய்து சாதனை நிகழ்த்திட வேண்டும்.  எல்லா நலமும், வளமும், சாதனைகளும் நிறைந்த எதிர்காலம் மாணவச் செல்வங்களுக்கு அமைந்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: