வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா வரலாற்றை தீர்மானித்த தனி மனிதர்களில் வி.பி.ராமன் ஒருவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வரலாற்றை தீர்மானித்த தனி மனிதர்களில் வி.பி.ராமனும் ஒருவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். பி.எஸ். ராமன் எழுதிய, வி.பி. ராமன்  வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையை நேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வாசித்தார். முதல்வரின் உரையில் கூறியுள்ளதாவது: நம் இதயங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதை எனக்குக் கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.  தன்னுடைய தந்தையின் வாழ்க்கை வரலாற்றை ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார்.

மகுடம் மறுத்தவராக இருந்தாலும், தான் வாழ்ந்த காலத்தில் முடிசூடா மன்னராக இருந்தவர்தான் வி.பி.ராமன். கோட்டையில் கோலோச்சுகிறார்கள் என்பதைப் போல - கோர்ட்டில் கோலோச்சியவர் வி.பி.ராமன்.  பல்வேறு வழக்கறிஞர்களுக்கு இது வழிகாட்டிப் புத்தகமாக அமைந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக திமுக தொடக்க காலத்தில் பல்வேறு வகையில்  துணையாக இருந்தவர் நம்முடைய வி.பி.ராமன். இவை அனைத்தும் இந்தப் புத்தகத்தில் முழுமையாக இடம் பெற்றுள்ளது.

வழக்கறிஞரான வி.பி.ராமன் அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு அவரை சென்னை சட்டக் கல்லூரியின் பகுதிநேரப் பேராசிரியராக நியமிக்கிறார் அன்றைய முதலமைச்சர் காமராசர். திமுகவின் உறுப்பினராக இருக்கக் கூடியவர், இப்படி கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாமா என்று சர்ச்சை கிளம்புகிறது.  இது தொடர்பாக வி.பி.ராமன் நோக்கியே கேள்வி எழுப்பப்பட்டது. அப்படி எந்த விதிமுறையும் இல்லை என்று வாதிடுகிறார் வி.பி.ராமன்.

இவருக்காகவே, சட்டவிதி திருத்தப்படுகிறது. இந்த விதி வந்தபிறகு தனது பகுதிநேரப் பேராசிரியர் பதவியைத் துறந்து, திமுகவில் தொடர்ந்தவர்தான் வி.பி.ராமன். செயற்குழுவில் இடம்பெற்றார்.

சட்டதிட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றவர். திராவிடநாடு கொள்கையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக இயக்கத்தில் இருந்து 1961ம் ஆண்டு தன்னை விடுவித்துக் கொண்டார். இருந்தாலும் 1967ம் ஆண்டு தேர்தலில்  அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து கூட்டணிக்கு உதவியவர் வி.பி.ராமன் தான். அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் வி.பி.ராமன் நடந்து சென்றதை இந்தப் புத்தகம் குறிப்பிட்டிருக்கிறது. அதன்பிறகு அரசியல் ரீதியாக அவர் மாறான நிலைப்பாடுகள் எடுத்தாலும் கலைஞருடனான நட்பு குறைந்தது இல்லை. அவரது இல்லத்தின் அனைத்துத் திருமணங்களிலும் கலைஞர் பங்கெடுத்தது இந்த நூலில் தவறாமல் பதிவாகி இருக்கிறது.

அண்ணா, கலைஞர் உரையைத் திருவல்லிக்கேணியில் கேட்டு அதன்பிறகு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அந்த நட்பு மட்டும் இறுதிவரை மறையவில்லை. எம்.ஜி.ஆர். தனது கட்சியில் சேரச் சொன்னபோது இவர் சேரவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை பி.எஸ்.ராமன் சரியாகச் சொல்லியிருக்கிறார். ‘தானும் ஒரு காலத்தில் பகுதியாக இருந்து வந்திருந்த திமுக என்ற அரசியல் கட்சியை எதிர்ப்பது என்பது அவருடைய இதயத்துக்கு ஏற்புடையதாக இல்லை’ என்று பி.எஸ்.ராமன் சொல்லி இருக்கிறார். 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் வி.பி.ராமன்  மறைகிறார். அதே ஆண்டில் ஜூன் 3 அன்று  கலைஞரை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து சந்தித்தார்.

மற்றபடி இந்தப் புத்தகம் என்பது மிகமிக அரிய பொக்கிஷம். வரலாற்றைத் தனிமனிதர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால், அப்படித் தீர்மானித்த தனிமனிதர்களில் வி.பி.ராமனும் ஒருவர். அவர் மூலமாகத் தமிழ்நாட்டின் வரலாற்றையே இந்தப் புத்தகத்தின் மூலமாக மனக்கண் முன் நிறுத்திவிட்டார் பி.எஸ்.ராமன். ‘லாயிட்ஸ் கார்னர் இல்லம் அது ஒரு தேன்கூட்டின் உயிர்ப்பு மிகுந்த செயல்பாட்டுக் கூடமாக அமைந்திருந்தது’ என்று பி.எஸ்.ராமன் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தேன்கூட்டில் நாங்களும் உண்டு என்ற நட்புணர்வையும் உணர்த்தி, இந்த இனிய நிகழ்ச்சியில் நேரில் பங்கெடுக்க முடியாமல் போனதற்காக நான் வருக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

Related Stories: