×

ஒமேகா 3...10 நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒமேகா என்ற வார்த்தையை அவ்வப்போது கேட்கிறோம். புத்தகங்களில் படிக்கிறோம். இதன் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை ஊட்டச்சத்து நிபுணர் கோகிலவாணியிடம் முன் வைத்தோம்...நாம் உண்ணும் உணவிலிருந்து நம் உடலுக்கு கொழுப்புச் சத்து கிடைக்கிறது. இந்த கொழுப்புச் சத்தினை செறிவுற்ற கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), செறிவுறாத கொழுப்பு அமிலம் (Unsaturated fatty acid) என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பொதுவாக நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் என்கிற தாது உப்புகள் ஆகிய 5 வகையான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. சாதாரணமாக ஒரு கிராம் கொழுப்பில் 9 கலோரி இருக்கும். இவை கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினைவிட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை என்றும், செறிவுறாத கொழுப்பு அமிலங்கள் நமக்கு நண்பர்கள் என்றும் சொல்லப்படுகிறது. செறிவுற்ற கொழுப்பு அமிலங்களில் பால்மிடிக் அமிலம்(Palmitic acid), லாரிக் அமிலம்(Lauric acid), மிரிஸ்டிக் அமிலம்(Myristic acid) ஆகியவை அடங்கியுள்ளது. செறிவுறாத கொழுப்பு அமிலங்களில்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்(Omega 3 fatty acid) என்கிற இன்றியமையாத கொழுப்பு அமிலம்(Essential fatty acid) அடங்கியுள்ளது. இதை நமது உடலால் உற்பத்தி செய்ய இயலாது. நாம் உண்ணும் உணவுகளின் வழியாகவே இந்த இன்றியமையாத கொழுப்பு அமிலங்களை நாம் எடுத்துக் கொள்ள முடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வகைகள் மற்றும் அவை அடங்கியுள்ள உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.  

இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் மூன்று வகைகள் உள்ளது. இதன் முதல் வகையான ALA (Alpha linolenic Acid) என்பது தாவர மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஆளிவிதை(Flax seed), சியா விதை, சணல் விதை, வாதுமை கொட்டை(Walnut), பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றைச் சொல்லலாம். அடுத்ததாக EPA(Eicosapentaenoic acid) மற்றும் DHA (Docosa Hexaenoic acid) ஆகிய இவை இரண்டும் மாமிச உணவு வகைகளில் அடங்கியுள்ளது. உதாரணமாக மீன்கள்(Fatty fish), சிப்பிகளைப் போன்ற கடல் உணவுகள்(Oysters) போன்றவற்றில் இவை அடங்கியுள்ளது. மீன்களில் குறிப்பாக சால்மன் மீன், கெளுத்தி மீன்(Mackeral fish), சூரை மீன் (Tuna fish), சுறா மீன் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உடைய முதன்மையான மூலங்களாக உள்ளது. இனி இது உடல்நல ஆரோக்கியம் மேம்பட எப்படி உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் 10 நன்மைகள்

1. DHA என்பது மூளையின் ஒரு கட்டமைப்பு பகுதியாக (Structural component) அமைந்துள்ளது. எனவே, இவை குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD(Attention deficit hyperactivity disorder) என்று சொல்லப்படுகிற கவனச்சிதறல் நோயினை தடுக்கும் ஆற்றலுடையது. மேலும் இது மூளையின் நினைவாற்றல் திறனை அதிகரித்து, கற்றலை ஊக்குவிக்கின்றன. இந்த DHA-யுடன் அரக்கிடோனிக் அமிலம்(Arachitonic acid) உட்கொள்வதால் மூளையின் சிந்திக்கும் திறன்(Coginitive development) அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளால் அறியப்படுகின்றன. இந்த அரக்டோனிக் அமிலம் ஆட்டிறைச்சி, முட்டை போன்றவற்றில் காணப்படுகின்றன. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மூளையின் வளர்ச்சிக் குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் என்கிற மன இறுக்க நோய் மற்றும் பெருமூளை வாதம் (Cerebral Palsy) போன்றவற்றை குணப்படுத்த உதவுகின்றன.

2. EPA மற்றும் DHA வகை அமிலங்களில் Cardioprotective பண்புகள் உள்ளது. இவை இரண்டும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு (மாரடைப்பு) மற்றும் பக்கவாத நோயினைத் தடுக்கின்றன. ரத்தத்தில் Tryglycerides (அதிகளவு கொழுப்பினை உடைய தன்மை) அளவினைக் குறைக்கின்றன. மேலும் இது ரத்த அழுத்த நோய் மற்றும் இதய வால்வு கடினமாவதைத் தடுக்கிறது. இவை HDL (High Density Lipoprotein) என்கிற நல்ல கொலஸ்ட்ரால் அளவினை அதிகரிக்க உதவுகின்றன.

3. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் புற்றுநோயினைத் தடுக்கும் சக்தியுடையது. குறிப்பாக, குடல் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. அது மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை வர விடாமல் தடுக்கிறது.

4. DHA வகை அமிலம் கண்களின் விழித்திரையில்(Retina) முக்கிய மூலக்கூறுகளாக உள்ளது. எனவே, இந்த அமிலத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

5. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. அது நமது உடலில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

6. இந்த அமிலம் உடலிலுள்ள கால்சியத்தின் அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் Osteoporosis என்கிற எலும்பு தேய்மான நோயினை கட்டுப்படுத்துகின்றன. அதோடு எலும்பினை வலிமையுறச் செய்கின்றன.

7. கர்ப்பிணி பெண்கள் EPA மற்றும் DHA வகை அமிலங்களை அதிகளவு உட்கொள்வதால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தினை சரிசெய்து, கருவினை பாதுகாக்கலாம். மேலும் இவை குழந்தைகளின் எடையினை அதிகரிக்கச் செய்கின்றன. தாய்-சேய் நலனை பராமரிப்பதில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

8. சரும ஆரோக்கியத்தினை பாதுகாக்க இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எடுத்துக் கொள்வது அவசியம். இந்த அமிலம் முகச் சுருக்கத்தினைத் தடுத்து இளமையாக இருக்க உதவுவதாக அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. இந்த அமிலம் குழந்தைகளில் ஏற்படுகிற ஆஸ்துமா என்கிற சுவாசக்கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கிறது.

10. இந்த கொழுப்பு அமிலத்தில் மெலடோனின் என்கிற உறக்கத்தினை சீர்படுத்தும் ஹார்மோன் அடங்கியுள்ளது.

குறிப்பு : செறிவுறாத கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ள உணவுப் பொருள்களை பொரிக்கச் செய்வதன் (Deep fat fry) மூலம் அல்லது Microwave oven முறையில் சமைப்பதன் மூலம் அதிலுள்ள DHA மற்றும் EPA ஆகிய உடலுக்கு நன்மை பயக்கும் மூலக்கூறுகள் சிதைவடையலாம். எனவே, கொதிக்கவைத்தல் மற்றும் வேகவைத்தல் முறையில் சமைப்பதன் மூலம் இவற்றை சிதையாமல் பாதுகாக்கலாம்.

தொகுப்பு: க.கதிரவன்

Tags :
× RELATED அதிக புரதம்...அதிக நார்ச்சத்து...மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்...