வியாபாரிகளை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை: இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் வலியுறுத்தல்

சென்னை: இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னால் தமிழகத்தில் காவல்துறையால் வணிகர் செயலி என்ற கைபேசி செயலி நடைமுறைக்கு வந்துள்ளது. வியாபாரிகள் தங்களது கைபேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து தொல்லை கொடுக்கும் ரவுடிகள், சமூகவிரோதிகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தமிழக டிஜிபி அனைத்து வியாபாரிகளும் செயலியை பயன்படுத்த வலியுறுத்தியதன்பேரில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் கடைகள்தோறும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும்பணி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த மளிகைக்கடை நடத்தி வந்த எஸ்.கே.செந்தில்வேல் மாமூல் கொடுக்காததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும்.  

விலைமதிப்பற்ற உயிரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு குறைந்தபட்சம் ₹50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். ரவுடிகளும் சமூகவிரோதிகளும் அஞ்சும்வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். வியாபாரிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து  நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வருக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: