ராஜபாளையம் அருகே வாழை தோப்பை நாசம் செய்த காட்டு யானைகள்

*மின்வேலி அமைக்க கோரிக்கை

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே, வாழை தோப்பை காட்டு யானைகள் நாசம் செய்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துபாலராஜா. இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலம், மேற்கு தொடர்ச்சி மலை ராக்காச்சி அம்மன் கோயில் பீட் அடிவாரத்தில், கல்லாத்து காடு அருகே உள்ளது.

இதில், 3 ஏக்கரில் வாழை மரங்களும், 3 ஏக்கரில் பலா மற்றும் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு யானைகள் தோப்புக்குள் புகுந்து குலை தள்ளிய வாழை மரங்களை நாசம் செய்து வருகின்றன. சுமார் ஒரு ஏக்கரில் வாழைத் தோப்பு நாசமாகியுள்ளது. மேலும், பலா மரங்களில் 60க்கும் மேற்பட்ட பலாப் பழங்களை யானைகள் பறித்து தின்றுள்ளன.

10க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு வனவிலங்குகளால் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தோப்பைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளார். தற்போது கம்பி வேலியையும் உடைத்துவிட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. இதனால், ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி முத்துபாலராஜா தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்கக்கோரி பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை என புகார் தெரிவித்துள்ளார். எனவே, கல்லாத்து காடு பகுதியில் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: