பூதூர், தேவரியம்பாக்கம் ஊராட்சிகளில் முழு சுகாதார கிராம விழிப்புணர்வு நடைபயணம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில், தமிழக அரசின் முழு சுகாதார கிராம திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. இதில்,  பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.சுரேஷ் தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஒன்றிய முழு சுகாதார திட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக, ஊராட்சி செயலர் சத்தியபிரியன் அனைவரையும் வரவேற்றார். நடைபயணத்தின்போது தனிநபர் வீடுகள், பொது இடங்கள் போன்றவற்றில் கழிவுநீர் மற்றும் திடக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், தனி நபர் உறிஞ்சு குழிகள், சமுதாய கழிவுநீர் கால்வாய்கள், சமுதாய கழிவறைகள், பள்ளி அங்கன்வாடிகள் போன்றவற்றில் சுகாதார மேம்பாடுகள், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான திட்டமிடுதல் போன்றவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், கிராம வரைபடத்தின் மூலமாக எந்தெந்த பகுதிகளில் சுகாதார பணிகளை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பக்கம் ஊராட்சியில் முழு சுகாதார திட்டத்தின் கீழ் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சுகாதார நடைபயணம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். இதில், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடை பயணத்தை துவக்கி வைத்தார். இந்த நடைப்பயணத்தின்போது, வீடுகள் தோறும் தனிநபர் கழிவறை கட்டப்பட்டுள்ளதா, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதா, சாலைகளில் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளனவா என்பது குறித்து நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அமலிசுதா முனுசாமி, லோகநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தராஜ் உள்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு சார்ந்த பெண்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: