பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபாதை கடைகள் அகற்றம்

பெரம்பூர்:  பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை  மாநகராட்சி அதிகாரிகள்  அகற்றினர். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் பெரம்பூர் தொடங்கி ரெட்டேரி சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் கடைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. 60 அடி சாலை என்பதால், எப்போதும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்லும் இடத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதால் காலை மற்றும் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள், விளம்பர பலகைகள் மற்றும் கடைகளின் பேனர்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் திருவிக நகர் மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டு, அதன்பேரில் பலமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி முருகன்  உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர்கள்   ரவி வர்மன், பாபு தலைமையிலான குழுவினர் நேற்று காலை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு தொடங்கி ரெட்டேரி சந்திப்பு வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2 பொக்லைன் இயந்திரம் மற்றும் 4 லாரிகளில்  நடை பாதையில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றினர். பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் வண்ண விளக்குகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவதை முன்கூட்டியே அறிந்த கடைக்காரர்கள் பலர், தங்கள் கடையின் முன் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை மற்றும் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: