பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டம் உள்ளிட்டவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மற்றும் சர்வதேச பொதுசுகாதார மாநாட்டிற்கான அடையாள இலச்சினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டிற்கான இணையதளம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தல், பொதுசுகாதாரம் செய்திமடல் இரண்டாம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.

இதன்மூலம் பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்திட 1969ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு இறப்பு பதிவேடுகளை சி.எஸ்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறைச் சார்ந்த பிறப்பு இறப்பு பதிவாளர்களால் 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை 1922ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022ம் ஆண்டு வரை நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற இத்தருணத்தில் தமிழக பொதுசுகாதாரத்துறையின் தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொதுசுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை அறிவிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும். உலகளாவிய பொதுசுகாதார வல்லுநர்கள், முன்னோடிகள், ஆய்வு அறிஞர்கள் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்தம் திறன் நுட்பங்களை அனுபவங்களை பல்வேறு தலைப்புகளின்கீழ் நம்மோடு பகிர்ந்துகொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழக பொதுசுகாதார துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் புத்தக வடிவிலும், மின்னூல் வடிவிலும் மாநாட்டு மலர் வெளியிடப்படும். இந்த மாநாட்டின் முன்னோட்டமாக இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டு, நூற்றாண்டு இலச்சினை வெளியிடப்பட்டது.  இந்நிகழ்வில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், சேகர், மற்றும் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அரசு உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: