எண்ணெய் நிறுவனங்களில் திடீர் கட்டுப்பாடு; தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு: வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

சென்னை: எண்ணெய் நிறுவனங்களில் திடீர் கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வினியோகம் செய்த பிறகு, அதற்கான தொகையை குறிப்பிட்ட கால நேரத்தில் பெற்று வந்தன. அதாவது தினமோ அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறையோ, 4 நாட்களுக்கு ஒருமுறையோ, வாரத்திற்கு ஒரு முறையை பணத்தை பெற்று வந்தனர். காலம் காலமாக இது ேபான்ற நிலை தான் நீடித்து வந்தது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது திடீரென ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, பெட்ரோல், டீசல் வாங்கினால் உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள கடனை உடனடியாக அடைக்க வேண்டும்.

முன்தொகை கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே  பெட்ரோல்-டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. எண்ெணய் நிறுவனங்களின் இது போன்ற அறிவிப்பால் டீலர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணம் கட்டி வாங்கும் அளவுக்கு டீலர்கள் முன்வரவில்லை. அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவு பெட்ரோல், டீசல் கேட்டால் அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, ஒரு ஆர்டர் கொடுத்தால் அதை 4 டீலர்களுக்கு பிரித்து அனுப்புகின்றனர். இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில்  தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாடு பல மாவட்டங்களில் பரவ தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புறங்களில் அதிக தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது.

 

இந்த நிலை இப்படியே நீடித்தால் தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பாடு நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது: எண்ணெய் நிறுவனங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உடனே கொண்டுவரக்கூடாது. இதனால் சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்பது உரிமையாளர்களால் முடியாத காரியம். இதனால் பெட்ரோல்-டீசல் வினியோகம் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

தற்போது கிராம புறங்களில் தான் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏனென்றால் அங்குள்ள பங்குகளில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 ஆயிரம் லிட்டர் வரை பெட்ரோல், டீசல் விற்பனையாகும். அவர்களால் உடனடியாக பணத்தை கட்டி பெட்ரோல், டீசல் வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசல் கேட்டால் அதை உடனடியாக வழங்குவது இல்லை. அதை 4 பேருக்கு பிரித்து வழங்குகின்றனர். இதனால், பெட்ரோல், டீசலை உடனடியாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் நகர்புறங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: