கழிவுநீர் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ₹5 லட்சம் இழப்பீடு: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடியில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை ₹5 லட்சத்தை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (28). கூலிதொழிலாளி. இவர், கடந்த மே 6ம்தேதி ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது விஷவாயு தாக்கி முத்துக்குமார் இறந்தார். முத்துக்குமாரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ₹5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில்  நேற்று நடந்தது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு முத்துக்குமாரின் பெற்றோரிடம் ₹5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதுபோல் ஆவடி மாநகராட்சி 48 கவுன்சிலர்களின் மே மாத சம்பளம் 39,400 ரூபாயும் முத்துக்குமாரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், செயல் பொறியாளர் மனோகரன், மண்டலக்குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி நாராயணபிரசாத், நகர பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், நாராயண பிரசாத், பொன் விஜயன், கவுன்சிலர்கள் மற்றும் சுகாதார அலுவலர் ஜாபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: