பனைமரத் தொழிலாளர் வாரியம் தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமனம்

திருவொற்றியூர்: தமிழகத்தில் பனைமர தொழிலாளர்களின் நலனுக்காக 10.9.2006 அன்று கலைஞரால் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து உதவித்தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. 2010ம் ஆண்டு  குமரி அனந்தனை தலைவராக கொண்டு இறுதியாக திருத்தி அமைக்கப்பட்டு, வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 18.8.12 அன்றுடன் முடிவடைந்தது.

பனைமர தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 14.6.22 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி சமத்துவ மக்கள் கழகத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எர்ணாவூர் ஏ.நாராயணன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், குடும்பத்துடன் இன்று தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன், மாநில பொருளாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். எர்ணாவூர் நாராயணனுக்கு சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள், நாடார் பேரவை பொது நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: