அடுத்த வீட்டில் நுழைய முயன்றதைக்கண்டு குரைத்த நாயை கொத்திக் கொன்ற பாம்பு:மன்னார்குடியில் சோகம்

மன்னார்குடி: மன்னார்குடியில் அடுத்த வீட்டில் பாம்பு நுழைய வீட்டினுள் நுழைய முயன்ற பாம்பை செல்லவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட சண்டையில் பாம்பு கடித்து நாய் இறந்தது. விலங்கு இனங்களில் மிகவும் நன்றியுள்ளது நாய் ஆகும். மனிதர்களோடு ஒன்றிணைந்து வாழும் வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. குறும்பும், அதீத பாசமும் நாய்களிடம் அதிகம் இருக்கும். சோறு போட்டு தன்னை வளர்த்த எஜமானர்களை அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பாம்பு மற்றும் திருடர்களிடம் இருந்து காப்பாற்றும்போது தன் உயிரை இழந்த நாய்கள் உண்டு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்பி சிவம்நகர் குமரன் சாலையை சேர்ந்தவர் தேவதாஸ் (63). ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன் என்பவர் நாட்டு நாய் வளர்த்து வருகிறார். சுறுசுறுப்பான இந்த நாய் தனது எஜமானரிடம் பழகுவது போல் தேவதாஸ் குடும்பத்தினரிடமும் பாசமாக பழகி வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தேவதாசும், அவரது மனைவியும் சாப்பிட்டு விட்டு வீட்டு வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இவர்களுக்கு சொந்தமான கார் வீட்டுக்கு வெளியே நிறுத்தபட்டிருந்தது. அப்போது சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று காம்பவுண்டு சுவர் ஓரமாக ஊர்ந்து வந்து தேவதாஸ் வீட்டுக்குள் நுழைய முயன்றது.

இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன் வளர்க்கும் நாய் பார்த்து ஓடி வந்து பாம்பை பார்த்து குறைத்தது. இதையடுத்து பாம்பு படமெடுத்து சீறியது. பாம்புடன் நாய் கடுமையாக சண்டையிட்டது. இறுதியில் பாம்பு கடித்ததில் விஷம் நாய்க்குஏறி வாயில் நுரை தள்ளியபடி பரிதாபமாக நாய் இறந்தது. நாய் குரைத்த சத்தம் கேட்டு வெளியே வந்த தேவதாஸ் படமெடுத்து ஆடியபடி சீறிய நல்ல பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாம்பு, பாம்பு என சத்தம் போட்டார். அப்போது அவ்வழியே சென்ற வக்கீல் அமிர்தராஜா உள்ளிட்டோர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பாம்பு அங்கு நிறுத்தப்பட்டிருந்த தேவதாஸின் காருக்குள் புகுந்து கொண்டது.

இதுகுறித்து வந்த தகவலின் பேரில் மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் உத்தரவின்பேரில் சிறப்பு நிலைய அலுவலர் பரமசிவம், செங்குட்டுவன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து காருக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து ஒரு பையில் போட்டு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். தன்னை வளர்த்த எஜமானர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் நுழைய முயன்ற பாம்பை போராடி தடுத்தபோது பாம்பு கடிதத்தில் அந்த நாய் பரிதாபமாக இறந்த சம்பவம் இரு வீட்டினரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: