பைக் ஓட்டியதாக 18 வயதிற்குட்பட்ட 34 பேர் மீது வழக்கு: பெற்றோரை வரவழைத்து பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

சென்னை: சென்னை முழுவதும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பைக் ஓட்டியதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரை வரவழைத்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், வயது குறைவானவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கும், மூன்று பேர் வாகனத்தை இயக்குவதை தடுப்பதற்கும், 14ம் தேதியன்று வாகனங்களை ஓட்டும் சிறார்களுக்கு எதிராக சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. மொத்தம் 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்படி வடக்கு, தெற்கு, கிழக்கு மண்டலத்தில் 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டியதாக 34 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 295 பேர், மூன்று பேர் பயணம் செய்ததாக 196 பேர் என மொத்தம் 525 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து, போக்குவரத்து உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. வயது குறைவான நபர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும் விளக்கிக் கூறப்பட்டது. சட்டப்படி அபராதம் அவர்களிடமிருந்து பெறப்பட்டதுடன் ஓர் உறுதி மொழி கடிதம் பெறப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: