பிரேத பரிசோதனை அறிக்கைபடி போலீஸ் சித்ரவதையில் ராஜசேகர் இறக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அன்பு விளக்கம்

சென்னை: போலீஸ் சித்ரவதையில் குற்றவாளி ராஜசேகர் இறக்கவில்லை என்று சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் அன்பு விளக்கம் அளித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜசேகர் சந்தேகமான முறையில் மரணமடைந்தார். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த குற்றவாளி ராஜசேகர் பிரேத பரிசோதனை  அறிக்கை நேற்று வெளியானது.

இதுகுறித்து சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு நேற்று மாலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜசேகர் உடலில் 4 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜசேகரை போலீசார் கைது செய்த போது தனக்கு மயக்கம் வருகிறது என கூறினார். உடனே போலீசார் ராஜசேகரை மருத்துவமனைக்கு அழைத்து  சென்று பரிசோதனை மேற்கொண்ட போது மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி ராஜசேகரை புறக்காவல் நிலையத்தில் ஓய்விற்காக ஒரு மணி நேரம் தங்க வைக்கப்பட்ட பிறகு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை  அடுத்து உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை ேமற்கொள்ளப்பட்ட போது தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். அதன் பேரில் அவரை அழைத்து செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.

விசாரணையின் போது எதிர்பாராதவிதமாக அவர் மரணம் அடைந்ததால், குற்றவியல் நடைமுறை சட்டம் 176-1 பிரிவின் படி முழுமையான விசாரணை நடந்துள்ளது. 4 காயங்கள் இருப்பதை மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு காயங்களும் சுமார் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரையிலான காயங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த 4 காயங்களின் காரணமாகவும் அவர் மரணம் அடையவில்லை என்பதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை என்னிடம் அவர் 10 மணி நேரம் இருந்தார். இந்த காயங்கள் அனைத்தும் அதற்கு முன்னதாகவே ஏற்பட்டதாக கருதப்படும். எனவே காவல் சித்ரவதை நடைபெறவில்லை என்பதற்கு இந்த மருத்துவ அறிக்கையே சான்று. உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்த பிறகும் அவரை விசாரிக்கவில்லை, முதல் பரிசோதனையின்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என மருத்துவர் தெரிவித்ததை அடுத்து அவரை மீண்டும் விசாரித்தோம். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்றைய தினம் காவல் நிலைய பணியில் இல்லை. முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டார்.

அதனால் சட்டம் -ஒழுங்கு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையில் இறந்ததால் தான் முதற்கட்டமாக காவல் ஆய்வாளர் உள்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். காவல்துறை தாக்கவே இல்லை என்பதை சொல்கிறது பிரேத பரிசோதனை அறிக்கை. துறை ரீதியிலான விசாரணை தற்போது நடந்து வருகிறது. காவல்துறையினர் பேரம் பேசுகிறார்கள் என்ற தகவல் பொய்யானது. இதுபோன்ற சம்பவத்தில் யாரும் ஈடுபடவில்லை. எப்போதும் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தான் முதலில் வெளிவரும். எல்லாவிதமான அறிக்கைகள் வந்த பிறகே இறுதி அறிக்கை கொடுக்கப்படும். எப்படி இறந்து போனார் என்பது இறுதி அறிக்கை வந்த பிறகே தெரிய வரும்.

கொள்ளை வழக்கில் ராஜசேகர் கூட்டாளி ஆட்டோ ஓட்டுனர் சங்கர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நிகழாமல் தடுக்கும் விதமாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தனிப்படை போலீசாரையும் அழைத்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளோம். விசாரணைக்காக அழைத்து வருபவர்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஆட்கள், வயதானவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துவர வேண்டியதில்லை. தெளிவாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். அதனை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பது தொடர்பாக கீழ் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். உதவி ஆணையர்களை ஆய்வு செய்ய சொல்லி உள்ளோம். இரவு நேரங்களில் விசாரணைக்காக யாரையும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு கூடுதல் கமிஷனர் அன்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: