தஞ்சை அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்; 3 வீடுகள், கடை எரிப்பு: போலீஸ் வாகனம் உடைப்பு; எஸ்ஐ காயம்; போலீஸ் குவிப்பால் பதற்றம்

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடந்த வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் சாமி வீதியுலா முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. ராஜகிரி மெயின் ரோட்டில் வந்த போது, இருதரப்பினரிடையே பல்லக்கு தூக்குவதில் தகராறு ஏற்பட்டது. இதனால் நடுரோட்டில் சாமியை இறக்கி வைத்துவிட்டு இரு தரப்பினரும் கற்களாலும், மூங்கிலாலும் தாக்கி கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் மோதலை கண்டித்து தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் சாமி சிலையை வைத்து சாலை மறியல் நடந்தது. அவர்களிடம் வருவாய் துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. பின்னர் சாமி சிலை சாலையிலிருந்து எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. இந்நிலையில் கோயில் அருகே நேற்றிரவு கூடியிருந்த இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. தீ வைக்கப்பட்டதில் 3 வீடுகள், ஒரு கடை எரிந்து சாம்பலானது.

மேலும் கல்வீச்சில் பாபநாசம் டிஎஸ்பி வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. கபிஸ்தலம் எஸ்ஐ ராஜ்குமாரின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவரை போலீசார் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தலைமையில், ஏடிஎஸ்பி ரவீந்திரன், பாபநாசம் டிஎஸ்பி பூரணி, ஆர்டிஓ லதா, தாசில்தார் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். 20க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.

Related Stories: