ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஏக்கல்நத்தம் கிராமத்திற்கு கட்டுமான பணிக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம், மலைப்பாதையில் 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லப்பா என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார்.

அவரது வீட்டிற்கு கான்கிரீட் போடும் பணிக்காக, கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி பகுதியில் இருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன், அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (23), இந்திராணி (45), ஜோதி (30), லோகநாதன் (23), கோபி (40), மற்றும் ஐபிகானப்பள்ளி சென்னப்பன்(29) ஆகியோர் சென்றனர். சரக்கு வாகனத்தை பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்த டிரைவர் அஜித்குமார் (23) என்பவர் ஓட்டி வந்தார்.

 நேற்று காலை 7.30 மணியளவில் ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மலைப்பாதையில் பின்னோக்கி சென்று சாலையோரம் 30அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து சென்ற 7பேர படுகாயமடைந்தனர்.

அவர்களது சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மகராஜகடை போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: