கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு வாட்ஸ்அப்பில் வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தவறான செய்தி பரவி வருவதால் பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப் செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் அனிமல் ஹேண்ட்லர் மற்றும் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ15,000 மற்றும் ரூ18,000 எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் என தவறான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான செய்தியை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: