தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வர உள்ள நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்து அந்த பகுதியில் வெயிலின் கொடுமை குறைந்துள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. அதைத் தொடர்ந்து  திருச்சி, மதுரை,  வேலூர், திருத்தணி மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, நாமக்கல், கடலூர், பாளையங்கோட்டை, சென்னை, நாக்கப்பட்டினம் மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது.

இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,  நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர்,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதன் தொடர்ச்சியாக  கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை,  நீலகிரி, கோவை,  திருப்பூர்,  திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 18ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

Related Stories: