திருநின்றவூர் அருகே பிரசித்தி பெற்ற தும்பகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா: தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது

ஆவடி: திருநின்றவூர் அருகே மிகவும் பிரசித்திபெற்ற ஆலத்தூர் கிராம தேவதை தும்பகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.திருநின்றவூர் ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற 70 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை தும்பகாளியம்மன் கோயில் உள்ளது.  கடந்த 45 ஆண்டுகளாக கோயில் புனரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனை ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா மேகநாதன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் இணைந்து கோயிலை புனரமைத்து கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் புதிதாக வர்ணம் பூச ஏற்பாடு செய்தனர். அதன்படி கோயில் விமானங்கள் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து யாக குண்டகங்கள் அமைக்கப்பட்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. மேலும் நன்னீராட்டுக்கு கும்பங்கள் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை நடைபெற்ற குள்ளாக திருக்குட நன்னீராட்டு புனித கும்பாபிஷேகம் விழாவில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலத்தூர் கிராம தேவதை தும்பகாளியம்மன், முருகப்பெருமான் மற்றும் ராஜ கோபுரம் ஆகியவற்றில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பின்னர் சிவ ஆகம முறைப்படி தமிழ் வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் `ஓம் சக்தி பராசக்தி’ எனும் கோஷங்களை முழங்கினர். பின்னர் வானத்தில் கருடன் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த குடமுழுக்கு விழாவில் ஆலத்தூர், மேட்டு தும்பூர், பள்ள தும்பூர், எடபாளையம், முள்ளங்கி பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் சிறப்பாக முறையில் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, செந்தாமரை, மனோகரன், பக்தன், அருள், ஆறுமுகம் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேலும் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பட்டாபிராம் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: