பொதுப்பணி துறையில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் காலதாமதம் இருக்க கூடாது: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை மண்டலத்தில் பொதுப்பணித்துறையால் பல்வேறு கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், மருத்துவமனை கட்டிடங்கள், மணிமண்டபங்கள் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன.  இந்த பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:பொதுப்பணி துறையின் அதிகாரிகள் அனைவரும் கட்டிடங்கள் கட்டுவதில், நவீன முறைகளை கடைபிடித்து, முகப்பு தோற்றம் எழில்மிக்கதாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகவே முதல்வர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி கூடங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும்.  

பொதுப்பணி துறை கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். ‘தரமே தாரக மந்திரமாக’ இருக்க வேண்டும். எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டிடம், இதுவே பொதுப்பணி துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நில எடுப்பிற்கு நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கும்போது, தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான இடம் தேர்வு செய்யப்படாததால், பல இடங்களில் கட்டுமான பணி தாமதம் ஏற்படுகிறது. கோயில் நிலங்களை தேர்வு செய்யக்கூடாது.வேலூர் விளையாட்டு மைதானம் இன்னும் வேலை முடிக்காமல், இன்று வரை ஒப்படைக்கவில்லை. பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும். பொறியாளர்கள் பணிகளின் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை. 27.7.2022க்குள் பணியை முடிக்க வேண்டும். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தொற்று நோய் அவசர சிகிச்சை கட்டிடம் விரைவாக பணி முடிக்கப்பட வேண்டும். சைதாப்பேட்டை தாடண்டர் நகர், அரசு அலுவலர் குடியிருப்பு பணியினை விரைவாக முடிக்க வேண்டும். இதேபோன்று பொதுப்பணி துறையால், கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும், கட்டிடங்களையும் அவற்றின் கட்டுமான பணிகளின் காலதாமத்தை தவிர்த்து குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: