கிண்டியில் ரூ.250 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: கட்டுமான பணியை தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை: கிண்டியில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியையும், தாடண்டர் நகரில் ரூ.89 கோடில் தரைதளத்துடன் 19 அடுக்குமாடி கட்டிடத்தையும் தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும்  ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.250 கோடி மதிப்பில் 500 படுக்கை வசதியுடன் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை, தரை தளம் உட்பட 6 தளங்கள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில், 51428 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது வரை, 40 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடப் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அதேபோன்று பொதுப்பணித்துறை சார்பில் கிண்டியில் ரூ.36 கோடி செலவில் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 4 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமான பணி 35 சதவீதம் வரை முடிந்துள்ளது. இப்பணிகளையும் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சைதாப்பேட்டை தாடண்டர் நகர் வளாகத்தில் ரூ.89 கோடியில் தரை தளத்துடன் 19 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. 74 ஏக்கரில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும்  பல அடுக்கு பி டைப் குடியிருப்பு கட்டிட பணிகளையும் நேரில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்தும். இப்பணிகள்  எப்போது முடிக்கப்படும் என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுமான பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முன்னதாக தலைமை செயலாளர் இறையன்பு முன்னிலையில், கண்ணகி நகரில் அப்துல் கலாம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பெண்கள் கழிவறை கட்டுவதற்கு முதற்கட்டமாக ரூ.4 லட்சம் காசோலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: