வளிமண்டல மேலடுக்கு, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13, 14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 சென்டி மீட்டர் மழை ெபய்துள்ளது. பொன்னமராவதி 4 செ.மீ, கள்ளிக்குடி, சோலையார், திருமங்கலம், கோத்தகிரி, மதுரை விமானநிலையம், காரையூர், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15ம் தேதி தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: