இலங்கைக்கு வழங்க 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார். இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுவதாக கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகளுக்கு என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு மிச்சமாகும்.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவு கழக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல் விடப்பட்டுள்ளது. எனவே, அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும். அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஒரு விவசாயி எனவும் அதிக விலைக்கு அரசி கொள்முதல் செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

இதைக்கேட்ட நீதிபதிகள், நீங்கள் எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்தீர்கள். அதிக விலைக்கு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்குமே. மனுதாரர் விவசாயம் தவிர வேறு என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டனர். அதற்கு மனுதரார் அரசி வாங்கித் தரும் இடைத்தரகராக உள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிபதிகள், அரசின் சார்பாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவதால் இழப்பு ஏற்படும் என்று ஏன் வழக்கு தொடரவில்லை. இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போகிறோம் என்று எச்சரித்தனர்.

எனவே, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: