கண்டலேறு அணையில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக 6 டிஎம்சி நீர் பெற முயற்சி: இதுவரை 1.63 டிஎம்சி தமிழகத்துக்கு வந்து சேர்ந்தது

சென்னை: சென்னை மாநகர மக்களின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து 6 டிஎம்சி நீர் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 1.63 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நீர் ஆந்திராவிடம் இருந்து பெறப்படுகிறது. குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். இந்த நிலையில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க கோரி கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதையேற்று,கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கி.மீ பயணித்து ஜூன் 16ம் தேதி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. இந்த காலகட்டத்தில் 8 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 4.47 டிஎம்சி வரை ஆந்திர அரசு தந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் கடந்தாண்டு செப்டம்பர் 18ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.

இந்த நிலையில் தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சியில் 4 டிஎம்சி மட்டுமே தந்துள்ள நிலையில், அனைத்து ஏரிகளும் நிரம்பின. எனவே, அந்த சமயத்தில் தண்ணீர் தந்தாலும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டன.

இந்த சூழலில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கியதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

இதை தொடர்ந்து, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த மே 5ம் தேதி  காலை 9 மணியளவில் 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடந்த  மே 8ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 530 கன அடி நீர் தமிழக எல்லைக்கு வந்தது. இதுவரை 1.63 டிஎம்சி நீர் தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்துள்ளது. தொடர்ந்து, இந்த தவணை காலத்தில் 6 டிஎம்சி வரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 ஏரிகளில் 7.79 டிஎம்சி நீர் இருப்பு: 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 989 மில்லியன் கன அடியும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 131 மில்லியன் கன அடியும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3166 மில்லியன் கன அடியும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3072 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட தேர்வாய்கண்டிகையில் 437 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: