ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம் அமைக்க வல்லுநர் குழு : ராமதாஸ் வரவேற்பு

சென்னை : ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க.  கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பா.ம.க தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பா.ம.க. தான் காரணம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக  பெருமிதமடைகிறது.  வல்லுனர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டு்ம் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: