குன்றத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்

குன்றத்தூர்: குன்றத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 151 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கான ஜமாபந்தி, குன்றத்தூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி நேற்று வரை நடைபெற்றது. இதில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைபட்டா, நில அளவை, சமூக பாதுகாப்பு திட்டம், புதிய ரேஷன் கார்டுகள் வாங்க உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதுவரை, சுமார் 1,007 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் 53 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், 954 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 151 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை என 183 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, தாசில்தார் கல்யான சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

Related Stories: