சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.434 கோடியில் 15 ஏரிகளை புனரமைக்கவும் புதிதாக 7 தடுப்பணைகள் அமைக்கவும் முடிவு

* ரூ.600 கோடியில் 3 இடங்களில் ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம்

* 40 ஏரிகளில் இருந்து பைப்லைனில் நீர் கொண்டு வர திட்டம்

* முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.434 கோடி செலவில் 15 ஏரிகளை புனரமைக்கவும், புதிதாக 7 தடுப்பணைகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.600 கோடி செலவில் 3 இடங்களில் ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கவும், 40 ஏரிகளில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.300 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவை என்பது தினசரி 1,300 மில்லியன் லிட்டராக உள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு 15 டிஎம்சி வரையில் மாநகரின் குடிநீருக்கு தேவைப்படுகிறது. ஆனால், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட  பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை -தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் மூலம் மொத்தமாக 11.50 டிஎம்சி நீர் மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை காலங்களில் சென்னையில் மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அதை சேமித்து வைக்க போதிய வசதி இல்லாததால், சராசரியாக 50 டிஎம்சி வரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. இதனால், கோடை காலங்களில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. இந்த நிலையில் மழைநீரை சேமித்து வைக்க நீர்வளத்துறை சார்பில் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.434 கோடியில் 15 ஏரிகள், 7 இடங்களில் தடுப்பணை அமைத்து அதில் மழை நீரை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, நீர்வளத்துறை சார்பில திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்ந்து இந்த திட்டத்தை உலக வங்கி நிதி உதவியின் மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வங்கி குழுவினர் நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வாரிய பொறியாளர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, மழை நீரை சேமித்து வைக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.434 கோடி வழங்க நிதி கேட்டிருந்தது. அதே போன்று, சென்னை குடிநீர் வாரியம் சார்பிலும் ரூ.600 கோடி மதிப்பிலான புதிய குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி, குடிநீர் வாரியம் சார்பில் 3 இடங்களில் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைப்பது, 40 ஏரிகளில் இருந்து குடிநீருக்கு பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவது உட்பட புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதற்காக, இரண்டு துறை சார்பில் நிதி கேட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.300 கோடி வழங்க உலக வங்கியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து விரைவில் தமிழக அரசின் நிதியுதவியை பெற்று இப்பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பருவமழை காலங்களில் சென்னையில் மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அதை சேமித்து வைக்க போதிய வசதி  இல்லாததால், சராசரியாக 50 டிஎம்சி வரை ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories: