பந்தலூர் அருகே பரபரப்பு நாயை மிதித்து கொன்று 2 வீடுகளை இடித்து தள்ளிய காட்டுயானை: கிராம மக்கள் பீதி

பந்தலூர்: பந்தலூர் அடுத்துள்ள தேவாலா பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த காட்டுயானை நாயை மிதித்து கொன்றுவிட்டு 2 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த தேவாலாவில் உள்ளது கைதகொல்லி கிராமம். இந்த கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை புகுந்தது. யானையை பார்த்து அங்கிருந்த வளர்ப்பு நாய் குரைத்தது. இதனால் எரிச்சலடைந்த யானை அந்த நாயை மிதித்து கொன்றது. பின்னர் கூலித்தொழிலாளர்கள் கதிர்வேல் மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளை இடித்து தள்ளியது.அங்கிருந்த அரிசியை தின்றுவிட்டு வாஷிங் மிஷனை உடைத்தது. யானை புகுந்ததை அறிந்த குடும்பத்தினர் அருகில் ஓடிச்சென்று தப்பினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சத்தம்போட்டு யானையை விரட்டினர். வனத்துறையினருக்கும் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். யானை சேதப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.யானை ஊருக்குள் புகுந்து நாயை கொன்று 2 வீடுகளை இடித்து தள்ளிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: