மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

சென்னை: பாஜகவை சேர்ந்த பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவடி அடுத்த மிட்டனம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலை புரணமைப்பதாக பல நபரிடம் பல லட்சம் பணத்தை வசூல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 30-ம் தேதி காலை இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 1-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி, பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி அளித்த மனுவானது, விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். அளிக்கப்பட்ட ஜாமீனானது நிபந்தனை ஜாமீனா? அல்லது நிபந்தனையற்ற ஜாமீனா? என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தது. 2-வது முறையாக ஜாமீன் கோரி அளித்த மனுவில், கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: